நமது அண்டை நாடான வங்கதேசத்தில், சிறுபான்மையாக உள்ள ஹிந்துக்கள் மீதும் ஹிந்து கோயில்கள் மீதும் அங்கு பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டாலும் அவர்கள் மீது காவலிதுறையினர் பெரிதாக நடவடிக்கைகள் எடுப்பதில்லை. தாக்குதல் நடத்துபவர்களுக்கு அரசியல்வாதிகளும் துணையாக உள்ளனர். அவ்வகையில், கடந்த ஞாயிற்று கிழமையன்று, ஒரே நாளில் 14 ஹிந்து கோயில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. தந்தலா யூனியன் பகுதியில் சிந்தூர்பிந்தி என்ற இடத்தில் இருந்த ஹிந்து கோயிலில் 9 சாமி சிலைகளும், பாரியா யூனியனில் காலேஜ்பாரா பகுதியில் உள்ள கோயிலில் 4 சாமி சிலைகளும், சரோல் யூனியனில் ஷாபாஜ்பூர் நாத்பாரா பகுதியில் உள்ள 12 கோயில்களில் 14 சாமி சிலைகளும் அடித்து உடைக்கப்பட்டு கோயில்கள் சூறையாடப்பட்டு உள்ளன. இதுபற்றி புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரித்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்று கிழமை காலைக்கும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்க கூடும் என காவல் அதிகாரிகள் கருதுகின்றனர். பல சாமி சிலைகளின் கைகள், கால்கள் மற்றும் தலைகளை உடைத்துள்ளனர். சில சிலைகள் உடைத்து குளத்தில் வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அரசிடம் அப்பகுதி ஹிந்துக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.