பாரதத்தின் உதவி – சிரிய தூதர் நெகிழ்ச்சி

0
99

பூகம்பத்தால் சிரியா பாதிக்கப்பட்டது குறித்த தகவல் அறிந்த உடன் அதற்கு ஆழ்ந்த வேதனையை தெரிவித்த பிரதமர் மோடி, பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய மக்களுக்கு பாரதம் அனைத்து வகையிலும் உதவும் என உறுதி அளித்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், சிரியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைசல் மேக்தாத்தை தொடர்பு கொண்டு பேசினார். உணவு, மருந்துப் பொருட்களை அனுப்புவது உள்ளிட்ட உதவிகளை பாரதம் வழங்கும் என உறுதி அளித்தார். டெல்லியில் உள்ள பாரதத்துக்கான சிரிய தூதர் பஸ்ஸாம் அல் காதிப்பை மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி. முரளிதரன் நேரில் சந்தித்து பாரதத்தின் வேதனையை பகிர்ந்து கொண்டார். இதையடுத்து, விமானப்படையின் சரக்கு விமானம் மூலம் மருந்துப் பொருட்களை சிரியாவுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சிரிய தூதர் பஸ்ஸாம் அல் காதிப், ”பூகம்பத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள பல்வேறு நட்பு நாடுகள் சிரியாவுக்கு உதவி வருகின்றன. இதனால் நிலைமை சற்று மேம்பட்டு வருகிறது. பூகம்பம் குறித்த தகவல் அறிந்தது முதல் பாரதம் உணர்வுபூர்வமாக சிரிய மக்களுடன் இணைந்துள்ளது. பாரதத்தின் உதவியை கோருமாறு எங்களுக்கு தகவல் வந்தது. நான், மத்திய வெளியறவுத்துறை அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டேன். அவர்கள் உடனடியாக உதவ முன்வந்தனர். என்ன வகையான உதவிகள் வழங்கப்பட உள்ளன என்பதை சில மணி நேரங்களில் தெரிவித்தார்கள். எல்லாமே மிக மிக வேகமாக நடந்தது. புதிய எதிர்காலத்திற்கான பாரதத்தின் செயல்பாட்டை இதில் நாங்கள் பார்த்தோம். பாரதம் தெற்கின் குரலாக உள்ளது. சிறந்த எதிர்காலத்தை எதிர்நோக்குபவர்களின் குரலாகவும் பாரதம் உள்ளது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here