அன்பு ஜோதி ஆசிரமத்தில் விசாரணை

0
95

விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்பு ஜோதி என்ற கிறிஸ்தவ ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜபருல்லா என்பவர் காணாமல் போனதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் கடந்த 10ம் தேதி காவலர்களும் அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடத்தி வருவதும், ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியதும் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் ஆசிரம பணியாளர்கள் சதீஷ், கோபிநாத், பிஜீ மேனன், உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவ்வழக்கினை டி.ஜி.பி சைலேந்திர பாபு, சி.பி சி.ஐ.டிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்குத் தொடர்பால கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், மருந்து, மாத்திரைகள், மடிக்கணிணி, அலைபேசிகள் ஆகியவை சி.பி சி.ஐ.டி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி சி.ஐ.டி எஸ்.பி அருண் பாலகோபாலன் தலைமையில் ஏ.டி.எஸ்.பி கோபதி அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஆசிரமத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கட்டப்பட்ட சங்கிலிகள், அடிக்க பயன்படுத்திய தடிகள் உள்ளிட்ட பொருட்களை காவல் அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் ஆசிரமத்தில் இருந்த தடயங்களை தடயவியல் துறை குழுவினர் சேகரித்தனர். இந்த ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனவர்கள், மனித உறுப்புகளுக்காக கொல்லப்பட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.இதனிடையே, “விழுப்புரத்தில், ஜூபின் பேபி மற்றும் மரியா நடத்திய அன்பு ஜோதி ஆசிரமத்தின் முழு உண்மையும் வெளிவர வேண்டும் எனில் அதற்கு சி.பி.ஐ விசாரணை ஒன்றே தீர்வு” என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here