குஜராத்தில் கடந்த 2002ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் சென்ற ரயில் பெட்டிக்கு முஸ்லிம் மதவெறியர்கள் கும்பல் தீ வைத்தது. இதில் 59 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கில் 31 பேர் தண்டிக்கப்பட்டதை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. என்றாலும் இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இவ்வழக்கில் மேல்முறையீடு செய்துள்ள குற்றவாளிகள், ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 17 ஆண்டுகள் சிறையில் இருந்த 2 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 7 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு நிலுவையில் உள்ளது. இந்த ஜாமீன் மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “பெண்கள், குழந்தைகள் உட்பட 59 பேரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட அரிதான இந்த வழக்கில் ரயில் வெளியில் இருந்து பூட்டப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 11 குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியதை எதிர்த்து குஜராத் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதை குஜராத் அரசு தொடர்ந்து வலியுறுத்தும். சபர்மதி விரைவு ரயிலின் ஒரு பெட்டியில் உள்ளவர்களை எரித்து கொன்ற இந்த வழக்கை வெறும் கல்வீச்சு வழக்காக மட்டும் பார்க்கக்கூடாது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் சிலர் தாங்கள் கல்வீச்சில் மட்டுமே ஈடுபட்டதாக கூறுகின்றனர். ஆனால் ஒரு பெட்டியை வெளியில் இருந்து பூட்டி, தீ வைத்துவிட்டு அதன் பிறகு ரயிலின் மீது கற்களை வீசினால் அது வெறும் கல்லெறிதல் சம்பவம் கிடையாது” என கூறினார். இதனையடுத்து இந்த பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் தண்டனையின் அளவு, அவர்கள் இதுவரை சிறையில் கழித்த காலம் குறித்த தகவல்களை அளிக்குமாறு இரு தரப்பு வழக்கறிஞர்களையும் வலியுறுத்திய நீதிபதிகள், வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.