காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

0
151

காவல் நிலைய மரணங்கள், சித்ரவதைகளை தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2018ல் உத்தரவிட்டது. இந்நிலையில் 2021ல் பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறை சித்ரவதை சம்பந்தப்பட்ட வழக்கில் இதனை மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் விவகாரத்தில் மாநில, மாவட்ட அளவிலான மேற்பார்வை குழுக்களை அமைக்க வேண்டும், சி.பி.ஐ, என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு, பொருளாதார நுண்ணறிவு பிரிவு, தீவிர குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு உள்ளிட்ட விசாரணை அமைப்புகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இதற்கு தேவையான நிதியை மத்திய மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் ‘நைட் விஷன்’ திறனுடன் இருக்க வேண்டும். அவற்றின் பதிவுகளை 18 மாதங்களுக்கு பாதுகாக்க வேண்டும். கைதிகள் தாக்கப்படுவது, லாக்கல் மரணம் போன்ற புகார்கள் வந்தால் மனித உரிமை ஆணையமும், நீதிமன்றமும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து 6 வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பான மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 25 மாநில, யூனியன் பிரதேச அரசுகள் இன்னும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சித்தார்த்தா தவே தெரிவித்தார். இதனையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றத் தவறும்பட்சத்தில், மத்திய உள்துறை செயலாளர், மாநில தலைமைச் செயலாளர்கள், மாநில உள்துறைச் செயலாளர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here