பாரதம் முழுவதும் காஷ்மீர் வீதிகள்

0
132

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு முஸ்லிம் பயங்கரவாதிகள், காஷ்மீரி பண்டிட்டுகள் மீதான இனப் படுகொலையை இன்றும் தொடர்கின்றனர். இதனை உலகின் கவனத்துக்கு கொண்டு வரும் நோக்கத்தில் புலம் பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டுகள், ‘உலக காஷ்மீரி பண்டிட் புலம் பெயர்ந்தோர் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் நடந்த மாநாட்டில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ‘‘உலகளவில் காஷ்மீரி பண்டிட்டுகள் குறித்த உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் மீதான கருத்துருவாக்கத்தை மாற்ற வேண்டியது அவசியம். குறைந்த பட்சம் பாரதத்தில் வாழும் அனைத்து பாரத மக்களும் நம்முடைய காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை, அவலங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். தனி நபராகவும் குடும்பமாகவும் நீங்கள் சந்தித்த வலிகளை 10 முதல் 20 நிமிட குறும்படங்களாக தயாரித்து வெளியிட வேண்டும். இவற்றை வெளியிட நமக்கு திரையரங்குகள் தேவையில்லை. நம் அனைவரிடமும் அலைபேசிகளும் கணினிகளும் உள்ளன. இந்த தொழில்நுட்பங்களை கொண்டு மக்களை அடையலாம். காஷ்மீரின் செழிப்பான கலாச்சாரம் மற்றும் ஆன்மிக அம்சங்களை பாதுகாப்பதில் ஆதரவு அளிக்க நான் தயாராக உள்ளேன். நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் ‘காஷ்மீர்’ என்ற பெயருடன் கூடிய தெருவோ, சதுக்கமோ, வட்டமோ இடம்பெற செய்வதற்கு மத்திய அரசுக்கு இதன் மூலம் கோரிக்கை விடுக்க வேண்டும். பாரதத்தின் தென் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் ‘காஷ்மீர் தினம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தலாம். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். அதன் மூலம் காஷ்மீர் பண்டிட்டுகளின் கலை, இலக்கியம், இசை போன்றவைகளை பிற பகுதி மக்களும் அறிந்து கொள்ளட்டும். உங்களுடைய கதைகள் வெறும் வலிகளுடன் மட்டும் நின்று விடாமல், காஷ்மீரின் தொன்மையான கலாச்சாரத்தின் அழகையும் வளங்களையும் துடிப்பான அதிர்வுகளையும் வெளிப்படுத்தும் வண்ணம் இருக்கட்டும்” என கூறினார். மேலும், இது தொடர்பாக சத்குரு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “காஷ்மீர் கருத்துருவாக்கத்தை மீண்டும் பேச வேண்டிய நேரமிது. காஷ்மீர் இளைஞர்கள் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும். காஷ்மீரின் தலையெழுத்தை மாற்றி எழுத வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here