பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கும் இருளர் சமூதாயத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் வீடுகளுக்கு நேரில் சென்று பாராட்டுத் தெரிவித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி. தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோர் பாரதம் மட்டுமில்லாமல் அமெரிக்காவிற்கும் சென்று பொதுமக்களுக்கு தொல்லைக் கொடுத்து வந்த பாம்புகளை தங்களுக்கே உரிய முறையில் லாவகமாக பிடித்து மக்கள் உயிரையும் அந்த பாம்புகளையும் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர். இதற்காக இருவருக்கும் பத்மஸ்ரீ விருதை அறிவித்தது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சார்பில், பத்மஸ்ரீ விருது பெற்ற வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு சென்னேரி கிராமத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர், “ஒரு இருளர் காலனி என்பது மற்ற இடங்களை போல தார் சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற வேண்டும். இதுகுறித்து நான் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு சில ஆலோசனைகளை வழங்குவேன். மேலும், இங்குள்ள 300 இருளர்களில் ஒருவர் கூட மத்திய மாநில அரசுப் பணியில் இல்லை என்பது தெரியவருகிறது. படிப்பில் கவனம் செலுத்துங்கள். இருளர் மக்களின் வளர்ச்சியே, இந்த தேசம் வளர்ந்ததற்கான உண்மை அடையாளம். உங்கள் பிரதிநிதிகளை என்னிடம் பேசச் சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவிகளை செய்துத் தருகிறேன்” என்றார். முன்னதாக, மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரது வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்த ஆளுநர், இருவரும் அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும்போது எடுத்த புகைப்படங்களையும் பார்வையிட்டார்.