“சாதி, இனத்துக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக வாழவேண்டும்”

0
279

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்கு வந்தார். அவரை பதி நிர்வாகம் சார்பில் குரு பால ஜனாதிபதி வரவேற்றார். தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அய்யாவழி பாரம்பரிய முறைப்படி தலைப்பாகை கட்டப்பட்டு, திருநாமம் இடப்பட்டது. பின்னர் வடக்கு வாசலில் அய்யா வைகுண்டசாமி தவம் இருந்த பகுதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சுற்றி வலம் வந்து தரிசனம் செய்தார் .பின்னர் பள்ளியறைக்கு சென்று பள்ளியறையை சுற்றி வலம் வந்து வைகுண்டசாமியை தரிசனம் செய்தார். அவருக்கு பதி நிர்வாகம் சார்பில் அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு புத்தகம் ஆங்கிலம் மற்றும் தமிழில் வழங்கப்பட்டது.ஆளுநர் ஆர்.என்.ரவி அய்யா வைகுண்டர் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியது: *தர்மம் கீழே விழும்போது அதை நிலைநாட்டி அந்தச் சூழலை சுமுகமாக மாற்றி, மனிதன் மட்டும் வாழ வழிவகை இல்லாமல், உலகில் அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதற்கு தேவை ஏற்படும் பொழுது அய்யா வைகுண்ட சாமி தோன்றினார்.

அய்யா வைகுண்டர் வாழ்ந்த காலத்தில் தீண்டாமை கொடுமை கோலூன்றி நின்றது. இது வெட்கப்பட்டு தலை குனிய வேண்டிய விஷயம். கடவுள் மனிதனாக அவதரித்துத்தான் இதை சரிசெய்ய முடியும். மனிதர்களுக்குள் நிலவி வந்த பெரும் ஏற்றத் தாழ்வுகளை மனிதனாகப் மட்டும் பிறந்த ஒருவரால் இந்த சமூக சீர்கேட்டை சரி செய்ய முடியாது. அய்யா வைகுண்டசாமிக்குள் இறை சக்தி இருந்ததால் மட்டுமே பெரிய ஏற்றத் தாழ்வு நிலையை மாற்றி மக்களை நல்வழிப்படுத்த முடிந்தது. மனிதநேயம் மட்டுமே நமது கலாச்சாரத்தின் அடிப்படை. அதர்மத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அனைவருமே கடவுள் என அய்யா வைகுண்டர் போதித்துள்ளார். சாதி, இனம், மதத்துக்கு அப்பாற்பட்டு அனைத்து மனிதர்களும் ஒற்றுமையாக வாழவேண்டும். இறைநம்பிக்கை இல்லாதவர்களும் இதில் ஓர் அங்கம்தான்.கண்ணாடி வழிபாட்டு முறையின் மூலம் அவரவர்களே கடவுள் என்ற நிலையை எட்ட வேண்டும் என்ற அவரின் போதனை போற்றுதலுக்குரியது. அதன்படி வாழும் அய்யாவழி குடும்பத்தினர் பெருகி உலகம் தழுவிய குடும்பமாக மாறிட வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here