மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, சென்னையில் இன்று நடைபெற்ற பிரமாண்ட விழாவில் ‘சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் அதிகாரப்பூர்வ இலச்சினை வெளியிடப்பட்டு, அதன் இணையதளமும் தொடங்கிவைக்கப்பட்டது. மேலும், நிகழ்வின் தீம் பாடலும் வெளியிடப்பட்டது, இது பங்கேற்பாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் ஏப்ரல் 17 முதல் 26 வரை குஜராத் மாநிலம், சௌராஷ்டிரா பகுதிகள் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும்.
சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு இடையே கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சியின் பின்னணியில் உள்ள சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் குறித்து திரு மன்சுக் மாண்டவியா கூட்டத்தில் விளக்கினார். சௌராஷ்டிர சகோதர சகோதரிகளின் பங்களிப்பை பட்டியலிட்ட அவர், தமிழ்நாட்டின் சமூக-கலாச்சாரத்திற்கு வணக்கம் தெரிவித்தார். சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தை ஏற்பாடு செய்ய தனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த அவர்,ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வுக்கு புதிய பரிமாணத்தை கொடுக்க அழைப்பு விடுத்தார்.
“பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இது மிகப்பெரிய சந்திப்பாக இருக்கும்” என்று திரு மன்சுக் மாண்டவியா கூறினார். “இது கலாச்சாரத்தின் சங்கமம், கலையின் சங்கமம், பாரம்பரியத்தின் சங்கமம், மொழியின் சங்கமம், இசை, நடனம் இன்னும் பலவற்றின் சங்கமம். சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்திற்கு அனைவரையும் வரவேற்கிறோம், இது சௌராஷ்டிராவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான கலாச்சார பிணைப்பை வலுப்படுத்தும் என்று நம்புகிறோம்.” எனக் கூறினார்.
‘சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்’ திட்டம் தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்டிரா சமூகத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள சௌராஷ்டிரா மக்களுக்கு குஜராத்தில் உள்ள தங்கள் சகோதரர்களுடன் இணைவதற்கும் அவர்களின் பகிரப்பட்ட மரபுகள் மற்றும் மதிப்புகளைக் கொண்டாடுவதற்கும் ஒரு தளத்தை வழங்கும். சோமநாதருக்கும் சோமசுந்தரேசுவரருக்கும் இடையே உள்ள தொடர்பை அவர் எடுத்துரைத்தார், இது இரு பகுதிகளின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. “சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்துவதில் பெருமிதம் கொள்கிறோம், மேலும் இது கலாச்சார பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.
திரு அனுராக் தாக்கூர், தனது காசி பயணத்தின் போது ஒரே பாரதம் உன்னத பாரதம் முயற்சியின் முன்னேற்றத்திற்காக தனது பாராட்டுதலை தெரிவித்தார். மக்களை இணைத்து, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் காசி தமிழ்ச் சங்கமத்தின் முயற்சிகளை அவர் பாராட்டினார். தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் இடையே கலாச்சார பரிமாற்றத்தை எளிதாக்கிய காசி தமிழ் சங்கமத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால் “வியப்பு” அடைந்ததாக தாக்கூர் கூறினார். இந்தியா பிரதிநிதித்துவப்படுத்தும் வேற்றுமையில் ஒற்றுமைக்கு இந்த பரிமாற்றம் ஒரு சான்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஒரே பாரதம் உன்னத பாரதம் முயற்சியின் புதிய அத்தியாயம் சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்துடன் விரைவில் தொடங்கும் என்று திரு தாக்கூர் தெரிவித்தார். சௌராஷ்டிரா மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையே கலாச்சார பரிமாற்றத்திற்கான சிறந்த வாய்ப்பு குறித்து உற்சாகமடைவதாக அவர் கூறினார். தாக்கூரின் கருத்துக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையே ஒற்றுமை மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரே பாரதம் உன்னத பாரதம் முன்முயற்சியின் வளர்ந்து வரும் வேகத்தைக் குறிக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் , சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், மேலும் இது தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் என்று கூறினார். காசி தமிழ் சங்கமத்தை ஏற்பாடு செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், இந்தியாவின் கலாச்சார ஒற்றுமையை மேம்படுத்துவதில் இத்தகைய நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமத்தை இதே முறையில் பிரதமர் ஏற்பாடு செய்வதாகவும், இதற்கு உறுதுணையாக இருந்த குஜராத் அரசுக்கும் பிரதமருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் அறிவித்தார்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் சௌராஷ்டிரா சமூகத்தின் பங்களிப்பை எடுத்துரைத்த டாக்டர் எல்.முருகன், பிரபல பின்னணிப் பாடகரான டி.எம்.சௌந்தரராஜன் அந்தச் சமூகத்திலிருந்து வந்தவர் என்பதை நினைவு கூர்ந்தார். சோம்நாத் மற்றும் ராமேஸ்வரம் இடையே உள்ள வரலாற்று மற்றும் ஆன்மீகத் தொடர்பை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்தியாவின் அனைத்து பகுதிகள் மற்றும் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இறுதியாக, பிரதமர் மோடியின் ‘அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்’ பிரச்சாரத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, தமிழ்ச் சமூகம் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.