1. உத்தரப் பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் மார்ச் 26,1907ஆம் ஆண்டு வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்தார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பள்ளிப் படிப்பு, ஜபல்பூரில் இளங்கலைப் படிப்பை முடித்தார். 7 வயதிலேயே எழுதுவதில் ஆர்வம் இருந்தது. பள்ளியில் படிக்கும்போதே, இவரது கவிதைகள் பிரபல பத்திரிகைகளில் வெளிவந்தன.
2. அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் எழுதிய நீஹார், ரஷ்மி ஆகிய கவிதைத் தொகுப்பு, நூல்களாக வெளிவந்தன. அற்புதமான கவிதைகள் எழுதியதோடு, தீப்ஷிகா, யாமா ஆகிய தனது படைப்புகளுக்கான ஓவியங்களையும் இவரே தீட்டினார்.
3. திருமணமானவர் என்றாலும் துறவு வாழ்க்கை வாழ்ந்தவர். பெண் கல்வி மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட அலகாபாத் மகிளா வித்யா பீடத்தின் முதல் தலைமை ஆசிரியராகவும் பிறகு இதன் வேந்தராகவும் பணியாற்றினார்.
4. இந்தியாவில் நிலவிய துன்பம், துயரங்களைக் கண்டு வேதனை அடைந்த இவர், அவற்றைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தினார். சமூகப் பிரச்சினைகள், ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கைத் தரம் குறித்த சிந்தனைகள் அடங்கிய இவரது கட்டுரைத் தொகுப்பு ‘ஸ்ருங்கலா கீ கடியா’.
5. சுதந்திரப் போராட்டத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார். சமூக சேவையிலும் ஈடுபட்டார். பெண் கல்வி, பெண் விடுதலைக்காக அயராது பாடுபட்டார். இதுபற்றி பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தீவிரமாக உழைத்தார்.
6. அலகாபாத்தில் இலக்கிய மன்றத்தைத் தொடங்கினார். சாகித்ய அகாடமி விருது, பத்மபூஷண், பத்மவிபூஷண், ஞானபீட விருது மட்டுமின்றி, இலக்கியத்துக்காக வழங்கப்படும் அனைத்து விருதுகளையும் பெற்றுள்ளார்.
7. ‘நவீன மீரா’, ‘இந்தி இலக்கியக் கோயிலின் சரஸ்வதி’ என்று போற்றப்பட்ட மஹாதேவி வர்மா 80 வயதில் (1987) மறைந்தார்.