சேலத்தில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், குஜராத் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, குஜராத் காந்தி நகர் மாவட்ட ஆட்சியர் பிரவீனா ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்குபேட்டியளித்த மத்திய இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், “மத்திய அரசும் குஜராத் மாநில அரசும் இணைந்து செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 17,750 பேர் இணையதளம் வாயிலாக பதிவு செய்துள்ளனர். செளராஷ்டிரா தமிழர்களின் வாழ்க்கை வரலாறு, கலைஞர்களின் வாழ்க்கை, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும்கலாச்சார நடைமுறைகள் மேலும் இந்தியக் கலாசார ஒற்றுமையை எடுத்துக்கூறும் வகையில் பல்வேறு நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 8 இடங்களில் இன்று ஒரே நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்கிற பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் குஜராத் அரசு நல்ல முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு துறைகளில் தமிழகம் மற்றும் குஜராத் இடையே மிகப்பெரிய ஒருங்கிணைப்பு உருவாகும் என்று கூறினார். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நம் இரு மாநிலங்களுக்கு இடையேயான பந்தங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. வரும் நாட்களில் குஜராத்தில் தமிழர்களை வரவேற்க பிரதமர், குஜராத் முதல்வர் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்” என தெரிவித்தார். மேலும், “நாடு முழுவதும் 7 இடங்களில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் தொடங்கிடும் வகையில் நாட்டிலேயே முதலாவதாக விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத நிதி மத்திய அரசு சார்பில் அளிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பிரச்சினை இல்லாத வகையில் அமைய உள்ள இந்த பூங்காவில், நீர் மறுசுழற்சி, ஆயத்த ஆடைப் பூங்கா, நெசவாளர்களுக்கான பொது சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளன. இதன்மூலம் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது” என்றார்.