மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை நவாதாவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றினார். ஆக்ரோஷமான நிலைப்பாடு பற்றி தற்போது பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. பேரணியின் போது அவர் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரை தாக்கிப்பேசினார். “ஒரு எதிர்பாராத சம்பவத்தால் என்னால் சஸாராம் செல்ல முடியவில்லை. அங்கு மக்கள் கொல்லப்படுகிறார்கள். தோட்டாக்கள் சுடப்படுகின்றன. எனது அடுத்த பயணத்தின்போது நான் கண்டிப்பாக அங்கு செல்வேன்,” என்று அவர் குறிப்பிட்டார். பேரணியில் உரையாற்றிய அவர் பீகார் ஷெரீப்பும் சஸாராமும் தீப்பற்றி எரிந்ததாகக் கூறினார். “நான் காலையில் ஆளுநரை அழைத்தேன். பிகார் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்று ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் லல்லன் சிங் அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது,”என்று அமித் ஷா தெரிவித்தார். ”பிகாரை கலவரம் இல்லாத மாநிலமாக ஆக்கவேண்டுமானால், இங்குள்ள நாற்பது இடங்களையும் மோதிக்கு கொடுங்கள், கலவரக்காரர்களை தலைகீழாகத் தொங்கவிட்டு நிலைமையை சீராக்குவோம்,”என்றார் .