எஸ். இராமநாதன், ஏப்ரல் 8, 1917ஆம் ஆண்டு சுப்பிரமணிய சாஸ்திரி, பட்டம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கர்நாடக இசை வாய்ப்பாட்டு, வீணை வாத்திய கலைஞர், இசை ஆராய்ச்சியாளர். ஏழாவது வயதில் இசைப் பயிற்சி தொடங்கினார். முதலில் திருக்கோயிலூர் இராமுடு பாகவதரிடமும், மணலூர்ப்பேட்டை சுப்பிரமணிய தீட்சிதரிடமும் இசை பயின்றார். டைகர் வரதாச்சாரியார், தஞ்சை க. பொன்னையா பிள்ளை, திருவையாறு சபேச ஐயர், சாத்தூர் கிருஷ்ண ஐயங்கார், மதுரை சுப்பிரமணிய ஐயர், தேவகோட்டை நாராயண ஐயங்கார் ஆகியோரிடம் இசை கற்றார். மதுரைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீ சத்குரு சங்கீத வித்தியாலயாவில் முதல்வராக பணியாற்றியுள்ளார். அமெரிக்கா கானக்டிகட் மாநில வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். சங்கீத கலாநிதி விருது (1985), மியூசிக் அகாதெமி (சென்னை) இசைப்பேரறிஞர் விருது (1981) ஆகிய விருதுகளை தமிழிசைச் சங்கம் இவருக்கு வழங்கியுள்ளது.