1910ம் ஆண்டு பிறந்த அடிகளாசிரியரின் பெயர் குருசாமி அய்யர். தமிழ் மீதும், மறைமலை அடிகள் மீதும் கொண்ட பற்று காரணமாக, தன் பெயரை, “அடிகளாசிரியர்’ என மாற்றிக் கொண்டார். கடந்த 1937ம் ஆண்டு, சென்னை பல்கலையில் புலவர் பட்டம் பெற்ற அவர், கல்லூரிகளில் விரிவுரையாளராகவும், சென்னை தமிழ்த்துறை ஆராய்ச்சியாளராகவும், 1950ல், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை சுவடிப்புலத்தில் சிறப்பு நிலை இணை பேராசிரியராகவும் பணிபுரிந்தார். 1970ல், சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழ் கல்லூரியில் முதல்வராக பணியாற்றினார். தொல்காப்பியம் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்ட அவர், பணி ஓய்வு பெறும் நிலையிலும் தொல்காப்பிய ஆராய்ச்சியை நிறைவு செய்து கொடுத்தார். அதனால், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், அடிகளாசிரியருக்கு, “தொல்காப்பிய செம்மல்’ என்ற விருது வழங்கியது. மேலும், அவரது தமிழ்த் தொண்டை பாராட்டும் விதமாக, சேக்கிழார் விருது, சிறந்த தமிழ் எழுத்தாளர் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டன. கடந்த 2009ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலை, அடிகளாசிரியரின் பணியைப் பாராட்டி, “தமிழ்ப் பேரவை செம்மல்’ விருது வழங்கியது. மத்திய அரசு சார்பில் வழங்கிய தொல்காப்பியர் விருது பெறுவதற்காக, 102 வயதான அடிகளாசிரியர், சென்னையில் இருந்து ஏர்-இந்தியா விமானத்தில் டில்லி சென்றுள்ளார். அதனால், ஏர்-இந்தியா விமானத்தில் அதிக வயது பயணி என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். தொல்காப்பியத்தின் மீது கொண்ட அதிக ஆர்வம் காரணமாக, ஆராய்ச்சி செய்து முடித்தேன். இதுவரை தமிழில் ஆராய்ச்சி நூல், படைப்பிலக்கியம், உரைநடை என, 64 நூல்கள் எழுதியுள்ளேன். தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு மத்திய அரசு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. அடிகளாசிரியரின் நூல்களும், அவரது வாழ்க்கை முறையும் வருங்கால தலைமுறையினருக்கு உதவியாகவும், அவர்களுக்கு பாடமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.