சென்னை: சீர்காழியில் கிடைத்துள்ள தேவாரச் செப்பேடுகள், கி.பி., 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவையே என்று வரலாற்று அறிஞர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், தருமபுர ஆதீன நிர்வாகத்தின் கீழ் சட்டநாதர் கோயில் உள்ளது. சைவ சமயத்தின் முதல் குரவரான திருஞானசம்பந்தர், 3ம் வயதில் ஞானப்பால் அருந்திய சம்பவம் நடந்தது இந்தக் கோயிலில்தான். இவ்வளவு சிறப்பு வாய்ந்த சட்டநாதர் கோயிலில், 32 ஆண்டுகளுக்குப் பின், மே 24ல் மகா கும்பபிஷேகம் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு திருப்பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 16ல், கோவிலின் தென்மேற்கு மூலையில், யாகசாலை அமைப்பதற்காக பூமியைத் தோண்டிய போது, 23 செப்புத் திருமேனிகள், 412 செப்பேடுகள், 86 உடைந்த செப்பேடுகள் மற்றும் சேதமடைந்த பீடங்கள், பூஜைப் பொருட்கள் கிடைத்துள்ளன.இவை 12ம் நூற்றாண்டு செப்பேடுகள் வரலாற்று அறிஞர்கள் உறுதிசெய்துள்ளனர்.