படித்ததில் பிடித்தது – “உணவே மருந்து இதயத்திற்கும்”

0
175

#சோறு

இன்று காலை அலுவலகத்திற்கு வந்துகொண்டு இருந்தேன். நிறைய கம்பெனிகள் இங்கே சனி ஞாயிறு விடுமுறை. சிப்காட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கும் போது ரோடு, வெறிச்சோடி,

கிடந்தது. தூரத்தில் போகும் போதே அந்த காட்சி என் கண்ணில் பட்டது.

 

ஒரு டிவிஎஸ் வண்டி ரோட்டோரமாக நின்றுகொண்டு இருந்தது. ரோட்டில் ஒரு முதியவர் நின்று கொண்டு தார்ரோட்டில் கொட்டிக்கிடக்கும் சாதத்தை பார்த்துக்கொண்டே நிற்கிறார். அவர் கையில் வெறும் டிப்பன் பாக்ஸ் ஒன்று ஒரு சின்ன பாக்ஸ் ஒன்று இருக்கிறது. அவர் கீழே கிடந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

 

அவரைப்பற்றி சொல்லனும்னா படிச்சவர் மாதிரி இருந்தார். கண்ணாடி அணிந்து இருந்தார்,  வயது அறுபது நெருங்கும் தோற்றம். வெள்ளை சட்டை, பிரவுன் கலர் பேண்ட். அவர் பக்கத்தில் நெருங்குவதற்கு முன்பே என்ன நடந்தது என்று யூகித்துவிட்டேன். கொண்டு போன லன்ச் பேக் அருந்து , கீழே விழுந்து, கொண்டு போன உணவு எல்லாம் கொட்டிவிட்டது.

 

சிலகாட்சிகளை பார்த்துவிட்டு அந்த இடத்தை நம்மால் கடக்க முடியாது. ஒரு இரண்டு வார்த்தை உச்சு கொட்டிவிட்டாவது சென்றால்தான் திருப்தியாக இருக்கும். நானும் அதே நோக்கத்தோடு வேகத்தை குறைத்து நின்று… “ஐயோ கீழே கொட்டிருச்சா”. அவர் தலையை மட்டும் அசைத்தார். அப்போதுதான் முகத்தை பார்த்தேன் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. உடைந்து போய் நின்றார்.

 

“சார்….  அய்யா…  இதுக்குபோய் ஏன் கலங்குறீங்க? தப்பா நினைக்க வேண்டாம். லன்ச்க்கு பணம்வேணா தரேன். விடுங்க அய்யா கொட்டியதை அள்ளவா முடியும்.. உங்க முகத்தை பார்க்க கஷ்டமா இருக்கு..” என்று முட்டாள்தனமாக பேசிட்டேன்.

 

என்னை ஒரு பார்வை பார்த்துட்டு அவர் பர்ஸ் எடுத்து காட்டினார். நிறைஞ்சு இருந்தது.

“என் ஒய்ப் ஆசை ஆசையா காலையில் ஐந்து மணிக்கு எழுந்து எனக்கு பிடிச்சதை சமைச்சு கொடுப்பா சார். மூட்டுவலி & சுகர் இருக்கு. உடம்புக்கும் முடில அவளுக்கு. மதியம் போன் பண்ணுவா சார் “எப்படி இருக்கு? டேஸ்ட் என்ன? உப்பு சரியா இருக்கா? நல்லா இருக்கா?னு கேப்பா சார்….”

 

அதற்க்கு மேலே என்னாலும் பேச முடியவில்லை. அவருக்கும் வார்த்தை வரல. ஒரு சில வார்த்தைகள் தான் ஆனால் ஓராயிரம் அர்த்தம் சொல்லியது.

 

கீழே கிடந்த உணவை அவர் வாஞ்சையா அள்ளி ஒரு கேரிபேக்கில் போட ஆரம்பித்தார். “ரோட்டில் கிடந்தா வேஸ்ட் ஆகிரும். ஏதாவது நாய்க்கு வச்சா சாப்பிடும்…” தனக்குத்தானே பேசிக்கொண்டார்.

 

எனக்கு அவர் சொன்ன வார்த்தையும், அதன் வலியும் அப்படியே இருக்கு இன்னும்.

 

சோறு என்பது ஒரு பொருள் அல்ல. அதை சமைப்பவர்களின் அன்பு.

 

எத்தனை முறை உதாசீனம் செய்திருக்கிறேன்.

 

“மதியம் பாக்ஸ் ரெடியா இருக்கு. இன்னிக்கி அவியல் செஞ்சேன்.”

 

“வேண்டாம்… ஆபீசில் சாப்பிட்டுகிறேன்.”

 

நைட் ….”வாங்க புதினா சட்னி இருக்கு .சாப்பிடலாம்.”

 

“வெளில சாப்பிட்டுட்டேன்”.

 

“ஒண்ணே ஒன்னு டேஸ்ட் பாக்கலாமே”.

 

“வயிறு புல்லா இருக்கு. வேண்டாம்.”

 

எத்தனை முறை நோகடிச்சு இருக்கிறோம். மிக பெரிய உதாசீனம் அது. சுருக்கென்று இருக்கிறது.

 

சாப்பாடுதானே வயிறு நிறைஞ்சா போதாதா? அப்டி இல்லை. நாம சாப்பிடுற சாப்பாட்டில் உப்பு இருக்கோ, காரம் இருக்கோ, புளிப்பு இருக்கோ…. தெரியாது ஆனால் சமைப்பவர்களின் அன்பு இருக்கு. சாப்பிட்டா நிறைவது நம்ம வயிறு மட்டும் இல்லை. அவர்களின் மனசும் சேர்ந்தே நிறைகிறது.

 

கொஞ்சம் பாராட்டலாம். அட பாராட்ட கூட வேண்டாம். ஒரு “தேங்க்ஸ்” சொல்லி பழகலாம். “நல்லா இருக்கு, தேங்க்ஸ்பா” என்று சொல்லலாமே.

இரண்டு மணி நேர அடுப்படி போராட்டம் உங்களின் ஒரே ஒரு வார்த்தையில் மகிழ்ச்சியாக மாற்றுமே..!!!!!

 

“உணவே மருந்து இதயத்திற்கும்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here