பிரம்மாண்ட காமாக்யா காரிடார் திட்டம்

0
142

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவால் ஒப்புதல் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு திட்டத்தின்படி, அசாம் அரசு, பழமையான காமாக்யா கோயிலை முழுமையாக மாற்றி மேம்படுத்த முயற்சிகளை எடுத்துள்ளது. அசாமின் குவஹாத்தியில் உள்ள நிலாச்சல் பர்வத்தில் அமைந்துள்ள சக்தி பீட ஸ்தலமான புராதன காமாக்யா கோயில் வளாகம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை போன்று மிகப் பிரம்மாண்டமாக மாற்றியமைக்கப்பட உள்ளது. இத்திட்டம், கோயில் வளாகத்தை அழகுபடுத்துவது, ஓய்வறைகள், குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அரங்குகள், காமாக்யாவின் வரலாற்றை சித்தரிக்கும் அருங்காட்சியகம், சக்தி பீடத்துடன் தொடர்புடைய புராணங்கள் காட்சிப்படுத்துதல், யாத்ரிகர்களின் வசதிகளை அதிகரிப்பது, வாகன நிறுத்துமிடங்கள், பரந்த திறந்தவெளி பூங்காக்கள், நகரும் பாதை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளை செயல்படுத்தி கோயில் தரிசனத்தை பக்தர்களுக்கு மறக்கமுடியாத ஒரு தெய்வீக அனுபவமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனை செயல்படுத்த ரூ. 500 கோடிக்கு மேல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பிரமாண்டமான திட்டத்தை கருத்திற் கொண்டுள்ள காமாக்யா கோயில் வாரியத்தின் கூற்றுப்படி, ‘காமாக்யா காரிடார்’ மற்றும் கோயில் வளாக புதுப்பிப்புத் திட்டத்திற்கான செயல்திட்டம் ஓரிரு மாதங்களில் உறுதி செய்யப்படும். இதற்காக, வாரியம் தற்போது கோயில் பூஜாரிகள், பண்டாக்கள் மற்றும் பிற சேவையாளர்கள், கடைக்காரர்கள் மற்றும் நிலச்சல் பர்வத்தில் வசிப்பவர்கள் உட்பட அனைவருடனும் ஆலோசனை நடத்தி வருகிறது.

காமாக்கியா தேவியின் பத்து வடிவங்களான மகாகாளி, தாரா, சுரஷி, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகலாமுகி, மாதங்கி மற்றும் கமலா ஆகிய தெய்வங்கள் தச மகாவித்யாக்கள் என அழைக்கப்படும். இந்த தெய்வங்களுக்கான 10 கோயில்கள் இதே நிலாச்சல பர்வதத்தில் அமைந்துள்ளன. இந்த கோயில்களுக்கான எளிதான மற்றும் வசதியான அணுகல், சுற்றுவட்டப் பாதை உள்ளிட்டவையும் இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த கோயில்களைத் தவிர, நிலாச்சல் பர்வத்தில் உள்ள மற்ற ஐந்து சிவன் கோயில்களான சித்தேஸ்வர், காமேஷ்வர், கோட்டிலிங்க, அம்ரா டோக்ரேஷ்வர் மற்றும் கேதாரேஷ்வர் ஆகியவையும் காமாக்யா கோயிலுடன் இணைக்கப்பட்ட மற்ற எட்டு கோயில்கள் மற்றும் நிலாச்சல் பர்வதத்தின் அருகிலும் ஆறு குளங்களும் இந்த புனரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்படும். மேலும், வயது முதிர்ந்த மற்றும் பலவீனமான யாத்ரீகர்களுக்காக எஸ்கலேட்டர்கள் மற்றும் ஆட்டோவாக்குகள் அல்லது டிராவலட்டர்கள் (நகரும் நடைபாதைகள்) நிறுவப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here