சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் கீழ், ஜல் ஜீவன் இயக்கம், நாட்டின் 12 கோடிக்கும் அதிகமான கிராமப்புற வீடுகளுக்கு குழாய்கள் மூலம் பாதுகாப்பான மற்றும் சுத்தமானக் குடிநீரை உறுதி செய்யும் புதிய மைல்கல்லை எட்டி சாதனையைக் கொண்டாடுகிறது. 2019 ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ஜல் ஜீவன் திட்டத்தை அறிவித்தார். அப்போது, கிராமங்களில் உள்ள 3.23 கோடி (16.64%) குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது. ஆனால், இன்றைய நிலவரப்படி, 5 மாநிலங்கள் (கோவா, தெலுங்கானா, ஹரியானா, குஜராத் மற்றும் பஞ்சாப்) மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் (புதுச்சேரி, டையூ, டாமன், தாத்ரா நாகர்ஹவேலி, அந்தமான் நிக்கோபார் தீவுகள்) 100 சதவீத குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளன. ஹிமாச்சலப் பிரதேசம் 98.35 சதவீதமாகவும் பீகாரில் 96.05 சதவீதமாகவும் விரைவில் முழுமை அடையத் தயாராக உள்ளன.
மத்திய, மாநில அரசுகளின் இடைவிடாத முயற்சிகளின் விளைவாக நாட்டில் உள்ள சுமர் 9.06 லட்சம் (88.55%) பள்ளிகள் மற்றும் 9.39 லட்சம் (84%) அங்கன்வாடி மையங்களில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டின் 112 முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களில், இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நேரத்தில், 21.64 லட்சம் (7.84%) குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் வசதி இருந்தது, அது இப்போது 1.67 கோடியாக (60.51%) அதிகரித்துள்ளது. 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பை செயல்படுத்தும் வேகத்தை மேலும் விரைவுபடுத்த மத்திய அரசு இடைவிடாமல் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் கூட்டாக இணைந்து செயல்படுகிறது.
ஜல் ஜீவன் இயக்கம் கிராமப்புற மக்களுக்கு குறிப்பிடத்தக்க சமூக பொருளாதார நன்மைகளை விளைவிக்கிறது. வழக்கமான குழாய் நீர் விநியோகம், மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் இளம்பெண்கள், தங்கள் அன்றாட வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, நீண்டதூரம் சென்று தண்ணீரை எடுத்துச் செல்வதில் இருந்து விடுவிக்கிறது. இதனால் அவர்களது சிரமம் குறைகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் நேரத்தை வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், குழந்தைகளின் கல்விக்கு ஆதரவளிப்பதற்கும் பயன்படுத்தலாம். ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்ட நேரத்தில், 22,016 குடியிருப்புகளில் 1.79 கோடி மக்கள் தொகை குடிநீரில் ஆர்சனிக், புளோரைடு மாசுபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ஆர்சனிக், புளோரைடு பாதிப்புக்குள்ளான அனைத்து குடியிருப்புகளிலும் இப்போது பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறது. மக்களின் பங்கேற்புடன், ஜல் ஜீவன் இயக்கம் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதை நோக்கி அணிவகுத்து வருகிறது. கிராமப்புறங்களில், அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்துள்ளது.