குஜராத்தில் அல் – குவைதா சதி முறியடிப்பு

0
137

ஆமதாபாத்-குஜராத்தில் இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த, அல் – குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, வங்கதேசத்தைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சிலர், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக, மாநில பயங்கரவாத தடுப்பு படையினருக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து, விசாரணை நடத்தி வந்த போலீசார், ஆமதாபாத் நகரில் வசித்து வந்த நான்கு இளைஞர்களை கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியது: கைது செய்யப்பட்ட நான்கு பேரும், நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு செயல்பட்டு வரும் அல் – குவைதா அமைப்பினருடன், இவர்களுக்கு தொடர்பிருப்பதும், முறையாக பயிற்சி பெற்றதும் தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் ஊடுருவியுள்ளனர். ஆமதாபாதில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருவது போல் செயல்பட்டு, இங்குள்ள இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக, போலி ஆதார் கார்டுகளை இவர்களே தயாரித்துள்ளனர். பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தனர். குஜராத்தில் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களில் வசிக்கும் சில இளைஞர்களையும் மூளைச்சலவை செய்யும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி இவர்களை கண்காணித்து வந்தோம்; பின், கைது செய்தோம். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதன் வாயிலாக, அல் – குவைதாவின் சதிமுறியடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here