பாரதத்தில் போர் விமான எஞ்சின் உற்பத்தி

0
92

பாரதமும் அமெரிக்காவும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டில் போர் விமானங்களுக்கான அதி நவீன ஜெட் என்ஜின்களை தயாரிப்பதற்கான பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் விளிம்பில் உள்ளன. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஒப்பந்தம் அடுத்த வாரம் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் டெல்லிக்கு வரும்போது இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க அரசு பயணத்தின் போது இந்த மிக முக்கியமான ஒப்பந்தம் வெளியிடப்படும் என்று விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், உள்நாட்டு லகுரக போர் விமானமான தேஜாஸ் எம்.கே2 மற்றும் பாரதம் தயாரித்து வரும் ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானமான அம்கா (AMCA) ஆகியவற்றை இயக்குவதற்கு பாரதத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஜிஇ 414 ரக என்ஜின்கள், பாரதத்தில் உள்ள ஒரு உள்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து பாரதத்திலேயே தயாரிக்கப்படும். இந்த ஒப்பந்தத்திற்கான விவாதங்கள் ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கியது.

அமெரிக்கா பாரதம் முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் (iCET) ஒரு பகுதியாக வாஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இதன் செயல்முறை தற்போது வேகம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில், பாரதத்தில் விமான என்ஜின்களை உற்பத்தி செய்வதில் ஒத்துழைக்க ஜி.இ நிறுவனத்திடம் இருந்து விண்ணப்பம் கிடைத்ததை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது. இந்த ஒப்பந்தம் பாரதத்தின் பாதுகாப்புத்துறை உற்பத்திக்கு பெரும் உந்துதலையும் முக்கியத்துவத்தையும் உலக அளவில் வழங்கும். அரசு வெளிநாட்டு இறக்குமதிகளை சார்ந்திருப்பதை குறைக்கும். பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும். மேலும், இந்த ஜெட் என்ஜின்களை நாட்டில் உற்பத்தி செய்வது, எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கலான திட்டங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலியின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மார்ச் மாதம் பாரதத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க விமானப்படையின் செயலாளர் பிராங்க் கெண்டல், முழு தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான அமெரிக்காவின் திறந்த தன்மையை வெளிப்படுத்தியிருந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தலைமையிலான iCET பேச்சுக்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here