#வவேசுப்பிரமணியஐயர்

0
95

திருச்சி, வரகனேரியில் மே 3, 1881ஆம் ஆண்டு பிறந்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி யில் பி.ஏ. பட்டம் பெற்றார். மாகாணத்தில் முதல் மாணவராகத் தேறினார். சென்னையில் சட்டம் படித்து சென்னை ஜில்லா கோர்ட்டில் வக்கீல் தொழில் புரிந்தார். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1907-ல் லண்டன் சென்றார். அங்கே இந்தியா ஹவுசில் தங்கியிருந்த சமயத்தில் வீர சாவர்க்கர் உள்ளிட்ட சுதந்தர புரட்சி வீரர்களின் தொடர்பு கிடைத்தது. ரகசியமாக நடத்தி வந்த அபிநவ பாரத் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகள் பெற்றார். பல இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்தார். பாரிஸ்டர் படிப்பிலும் தேர்ச்சியடைந்தார். பட்டமளிப்பு விழாவில் பிரிட்டிஷ் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டால்தான், பட்டம் வழங்கப்படும் என்பதால் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.இதனால் இவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. சீக்கியர் போல மாறு வேடம் பூண்டு, பிரிட்டிஷ் உளவாளிகளை ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாக 1910-ல் புதுச்சேரி வந்து சேர்ந்தார். அரவிந்த கோஷ், பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை கற்று தமிழ் மொழி செழிப்பதற்குப் பெரும் பங்காற்றினார்.1922-ல் சேரன்மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார்.இங்கு நன்னெறி, அறிவியல், கலை, இலக்கியம் ஆகிய வற்றுடன் உடல் வலிவூட்டும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். குளத்தங்கரை ஆசிரமம் என்ற சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன் முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதை. இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம்தான் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை தொகுப்பு.சுதந்திர போராட்ட வீரரும், தமிழில் நவீன இலக்கியத் திறனாய்வுக் கான அடிப்படைகளை அமைத்தவர் என்றும் தமிழ் நவீன சிறுகதை தந்தை என்றும் போற்றப்படும் வ. வே. சு. ஐயர், 1925-ஆம் ஆண்டு, 44-வது வயதில் ஒரு விபத்தில் காலமானார்.
#vvsaiyar #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here