சென்னை, ஐ.ஐ.டி., பயிற்சி மாணவர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப, இன்றைய மாணவர்களை உருவாக்கிட, ‘சாத்தியமற்றவை சாத்தியமானதே’ எனும் தலைப்பில், 75 நாள் கோடைக்கால செயல்திட்ட பயிற்சியரங்கை, சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப பூங்கா நிர்வாகம் நடத்தியது. இதில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ- – மாணவியர் 100 பேர் பங்கேற்றனர். இவர்கள் இரு குழுவாக பிரிக்கப்பட்டு, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கருவியை உருவாக்க 75 நாட்கள் செயல்திட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலியை உருவாக்கி, அதை இயக்கிக் காண்பித்தனர். பேட்டரியில் இயங்கும் இந்த சக்கர நாற்காலியில் ஒருவர் அமர்ந்து, ஆங்கிலம் அல்லது ஏதேனும் ஒரு இந்திய மொழியில் கட்டளையிட்டால், அதன்படி நாற்காலி நகர்ந்து செல்கிறது. பேச்சு வடிவில் மட்டுமல்லாது, எழுத்து மற்றும் சைகை மொழியில் கட்டளையிட்டாலும், அதைப் புரிந்து, ‘இடம், வலம், நில், செல்’ என்கிற உள்ளீடுகளுக்கு ஏற்ப இந்த நாற்காலி செயல்படுகிறது. வணிக வளாகம், ரயில் நிலையம், விமான நிலையம், மருத்துவமனை, பூங்கா உள்ளிட்ட இடங்களில் யாருடைய உதவியும் இன்றி, முதியோர், மாற்றுத் திறனாளிகள் இந்த சக்கர நாற்காலி வாயிலாக எளிதாகப் பயணிக்க முடியும். தானியங்கி நாற்காலியை உருவாக்க இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய் செலவானது. அடுத்தாண்டு நடக்க உள்ள பயிற்சி முகாமில் 500 மாணவர்கள் சேர்க்கப்படுவர்,” என்றார்.