மணிப்பூரில் மெய்டி மற்றும் கூகி பழங்குடியினர் சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது. கூகி பிரிவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, ஒரு கும்பலால் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில், 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில், மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமை குறித்து, அம்மாநில போலீசார் விசாரித்து வந்தனர். இந்த விசாரணை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. மணிப்பூர் வன்முறை சம்பவங்களை விசாரித்து வரும் சிபிஐ, 53 பேர் கொண்ட புதிய குழுவை அமைத்துள்ளது. இவற்றை விசாரிக்கும் சிபிஐ குழுவில் மூன்று டிஐஜி மட்டத்திலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பெண் அதிகாரிகள் குழுக்களை வழி நடத்துவார்கள். அவர்கள் அனைத்து வழக்குகள் குறித்தும் சிபிஐ இணை இயக்குனரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.