நம் ராணுவம் தொடர்பாக ரகசிய தகவல்களை சேகரித்து, அதை வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு அளித்த விவகாரத்தில், பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி மற்றும் ஓய்வு பெற்ற கடற்படை கமாண்டர் ஆசிஷ் பதக் ஆகியோரை, கடந்த மே 16ல் சி.பி.ஐ., கைது செய்தது. இவர்கள் இருவருக்கு எதிராக சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் மற்றும் அது தொடர்பான குற்றங்களில் இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளதாக சி.பி.ஐ., குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், ராணுவ உளவு விவகாரத்தில், வட அமெரிக்க நாடான கனடா குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளி தொழிலதிபர் ராகுல் கக்கல் என்பவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கனடாவில் இருந்து அவர், புதுடில்லி விமான நிலையம் வந்து இறங்கியபோது கைது செய்யப்பட்டார். அவரை நான்கு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது