சூரியனை பற்றி விரிவாக ஆய்வு செய்ய, ‘ஆதித்யா எல்1’ விண்கலத்தை, பி.எஸ்.எல்.வி., – சி 57 ராக்கெட் உதவியுடன், இஸ்ரோ கடந்த செப்.,2ல் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இந்த விண்கலம் நான்கு மாதங்கள் பயணித்து, பூமியில் இருந்து, 15 லட்சம் கிலோ மீட்டர் துாரம் உள்ள, ‘லாக்ரேஞ்ச் பாயின்ட் எல்1’ என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்தபடி சூரியனை ஆய்வு செய்யும். சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான துாரம் 15 கோடி கிலோ மீட்டர். இந்நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரத்தை இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா-எல்1 விண்கலம் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4வது முறையாக உயர்த்தப்பட்டது. பூமியிலிருந்து 256 கிமீ x 121973 கிமீ தொலைவில் உள்ளது. அடுத்த சுற்றுவட்டப்பாதை அதிகரிப்பு செப்டம்பர் 19ம் தேதி, அதிகாலை 02:00 மணிக்கு நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.