இந்தியாவின் சிறந்த பொறியாளர் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பொறியாளர்கள் தினம் செப்டம்பர் 15 அன்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தில் தான், கர்நாடக மாநிலத்தில் உள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் 1860-ம் ஆண்டு இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா பிறந்தார். அவருடைய பிறந்த நாளை நினைவு கூறும் விதமாக இந்த நாள் கொண்டப்படுகிறது.
இவரது முன்னோர்கள் ஆந்திர மாநிலத்தின் மோக்சகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவரது தந்தை சீனிவாச சாஸ்திரி ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்து விளங்கினார். தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியை கற்ற பின்னர், தன்னுடைய 15 வயதிலேயே தந்தையை இழந்ததால், மிகவும் கஷ்டப்பட்டு கல்வியைத் தொடர்ந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும், புனேவில் உள்ள அறிவியல் கல்லூரியில் கட்டட பொறியியல் படிப்பை பயின்றார்.
அரசாங்கப் பணியில் இருந்தாலும் புதிய விஷயங்களைச் செய்து பார்ப்பதில் ஆர்வமாக இருந்தார் விஸ்வேஸ்வரய்யா. இவர் நவீன நீர்ப்பாசன நுட்பங்கள் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் தணிப்பு துறைகளை உருவாக்கி வெற்றி பெற்றார்.
1903ம் ஆண்டில் புனேவில் கடக்வஸ்லா நீர்த்தேக்கத்தில் நிறுவப்பட்ட ‘தானியங்கி தடை நீர் வெள்ள வாயில்களை’ அவர் வடிவமைத்தார். இதன் மூலம், வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டத்தை வகுத்தார்.
காவிரி ஆற்றின் குறுக்கே இவரால் கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணை, அப்போது ஆசிரியாவிலேயே மிகப் பெரிய அணையாக இருந்தது. நான்கு தசாப்தங்களாக பொறியியலாளராக பணியாற்றிய பின்னர், புகழ்பெற்ற அரசு பொறியியல் கல்லூரியை 1917ம் ஆண்டில் நிறுவினார்.
விருப்ப ஓய்வுக்குப் பிறகு, பத்ராவதி எஃகு ஆலை, மைசூர் பல்கலைக்கழகம், தொழிற்சாலைகள், அரசு பொறியியல் கல்லூரி போன்றவற்றை உருவாக்கினார்.இவருடைய பொறியியல் திறமைகள் பலரையும் ஆச்சரியப்பட வைத்தன.
‘இந்தியப் பொறியியலின் தந்தை’ என்று அழைக்கப்படும் விஸ்வேஸ்வரய்யாவிற்கு, நாட்டின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா 1955ல் வழங்கப்பட்டது. இவர், 1962-ம் ஆண்டு தன்னுடைய 101 வயதில் மறைந்தார். இருப்பினும், இன்றும் அவர் உருவாக்கிய அணைகளும், தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் அவருடைய புகழைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. மேலும் அவர் ஒரு பொறியியலாளராக மட்டுமின்றி சிறந்த கல்வியாளராக திகழ்ந்தார்.