ஷியான் 6 என்ற சீன ஆராய்ச்சி கப்பல் வரும் அக்., மாதம் இலங்கை வர அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இலங்கையில் இருந்தவாறு தென் இந்தியாவின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்களை சீனா கண்காணிக்கும் அபாயம் உள்ளது என இலங்கையிடம் இந்தியா கவலை தெரிவித்தது. இந்நிலையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி அளித்த பேட்டியில் : சீன கப்பல் தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது. அதேநேரத்தில் வழக்கமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இதனடிப்படையில் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் பேசி வருகிறோம். இலங்கை வருவதற்கு சீன கப்பலுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவின் கவலைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். நமது பிராந்தியத்தை எப்போதும் அமைதியாக வைத்திருப்போம் என கூறி வருகிறோம் என்று அவர் கூறினார்.