பகத்சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் பிறந்தவர்.இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராகவும், இந்திய விடுதலைப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.ஜாலியன் வாலாபாக்கில் நடந்த கோரப் படுகொலைகள் அவர் மனதில் மிகப் பெரும் ரணமாக ஆகியிருந்தது. ஆங்கில கிறிஸ்தவர்களை எதிர்த்து களமிறங்கி போராட ஆரம்பித்தார். சைமன் குழுவை எதிர்த்து போராடி கொண்டிருந்தபோது, ஆங்கிலேய காவலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் தாக்கியதால் காயமடைந்த பஞ்சாப் சிங்கம் லாலாலஜபதிராய் மரணமடைந்தார். இதற்கு பழிவாங்குவதற்காக சக புரட்சியாளர்களான சிவராம் ராஜகுரு, சுகதேவ் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோருடன் கூட்டு சேர்ந்தார் பகத்சிங். தவறுதலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டர்ஸை சுட சமிக்ஞை காட்டப்பட்டதால், சாண்டர்ஸ் 17 டிசம்பர் 1928 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். ஆங்கிலேய காவலதிகாரியை சுட்டுக்கொன்றதற்காக பகத்சிங்கிற்கு தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டது. புத்தகப்பிரியரான பகத்சிங், தனக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்ற சிலமணி நேரங்கள் இருக்கும்போது கூட புத்தகம் படித்துக்கொண்டு இருந்தார். ராஜகுருவிடம் கடைசி வார்த்தையாக “விரைவில் மீண்டும் சந்திப்போம்” என்றார். தூக்கிடுவதற்கு முன்பு ஒவ்வொருவரின் எடையும் பார்க்கப்பட்டு, குறிக்கப்பட்டது. அனைவரின் எடையும், முன்பு இருந்ததை விட அதிகமாகியிருந்தது! தூக்குமேடையில், கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், மூன்று மாவீரர்களும் தங்களுக்கு விருப்பமான சுதந்திரப் பாடல்களை பாடினர். பிறகு மூவருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார்.இன்றைய இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் வாழ்க்கை போற்றத்தக்க ஒன்றாகும். விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட, தன் மரணத்தையே பரிசாகத் தந்த மாபெரும் போராளி.