ராஜாராம் மோகன் ராய்

0
119

வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டம் ராதாநகர் கிராமத்தில் (1772) பிறந்தார். சாதிவெறி, மதவெறி, பழமைவாதங்களுக்கு எதிராக செயல்பட்டார். கொல்கத்தாவில் வட்டிக் கடையில் வேலை செய்தார். பின்னர் 5 ஆண்டுகள் கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய்த் துறையில் பணியாற்றினார். சமூக ஏற்றத் தாழ்வுகள், முறைகேடுகளைக் கண்டு வெகுண்டார். சாதி, மத, சமூகத்தில் சீர்திருத்தம் கொண்டுவரும் முயற்சியாக கொல்கத்தாவில் 1815-ல் ஆத்மிக சபையை உருவாக்கினார். இதன்மூலம், அனைத்து மக்களும் சாதி, மத வித்தியாசமின்றி ஒன்றாக இணைந்து ஒரே இறைவனை வழிபட வழிவகுத்தார். பெண் உரிமை, பெண் கல்வி, விதவை மறுமணம், பெண் சொத்துரிமைக்காக பாடுபட்டார். உடன்கட்டை ஏறுதல், பலதார மணம் போன்றவற்றுக்கு எதிராக தீவிரமாகப் போராடினார். வேதாந்த சாஸ்திரங்களின் சாரத்தை 1819-ல் ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் எழுதி வெளியிட்டார். உபநிடதங்களை மொழிபெயர்த்தார். சமூக, மத சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தை நிறுவினார். சாதி அமைப்பு, குழந்தைத் திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்கள் முக்காடு அணியும் முறைக்கு எதிராக குரல் எழுப்பினார். கோயில்களில் உயிர் பலி போன்ற சடங்குகளை நிறுத்துமாறு அறிவுறுத்தினார். மனிதர்களிடையே தர்மம், நீதி, கடவுள் பக்தி, கருணை, நல்லொழுக்கம், மத நல்லிணக்கம் ஆகிய உணர்வுகளைத் தூண்டினார். உடன்கட்டை ஏறும் (சதி) பழக்கத்துக்கு எதிராக வெகுகாலம் போராடினார். அதன் பயனாக, 1833-ல் வில்லியம் பெண்டிங் கொண்டுவந்த சட்டத்தால், அது ஒழிக்கப்பட்டது. மாபெரும் கல்வியாளர், சிந்தனையாளராகவும் திகழ்ந்தார். மேற்கத்திய மருத்துவம், தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கினார். தற்போது உலகம் முழுவதும் வலியுறுத்தப்படும் பெண்ணுரிமைக்காக 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடியவர். ராஜா ராம் மோகன் ராய் செப்டம்பர் 27, 1833 ஆம் ஆண்டு 61 வயதில் மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here