இந்தியா – கனடா இடையிலான உறவை சீர்குலைக்கும் நோக்கத்தில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையை, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நிகழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில் குடியேறி சட்டவிரோதமாக அந்நாட்டு குடியுரிமை பெற்றார். அங்கு இருந்தபடி பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு நாச வேலைகளை அரங்கேற்றி வந்தார். இவருக்கு, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இவரது உதவியுடன், கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அரங்கேற்ற ஹர்தீப் சிங்கை, ஐ.எஸ்.ஐ., பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பஞ்சாபில் இருந்து கனடாவுக்கு புதிதாக வந்த காலிஸ்தான் ஆரவாளர்களை ஆதரிக்கும்படி, ஹர்தீப் சிங்கிடம் ஐ.எஸ்.ஐ., கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து ஐ.எஸ்.ஐ., ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொன்றுவிட்டு பழியை இந்திய ஏஜன்டுகள் மீது சுமத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.