இந்திய அஞ்சல்துறையின், பதிவு அஞ்சல் சேவை 1849ம் ஆண்டு, நவ.,1ம் தேதி துவங்கப்பட்டது (இந்தியாவில் தொடங்கப்பட்ட அதே நாளில்தான் லண்டனிலும் பதிவுத் தபால் முறை அறிமுகப்படுத்தப்பட்டது). 174 ஆண்டுகள் கடந்த பின்பும் தொடர்ந்து, அஞ்சலை பாதுகாப்பாக அனுப்ப நம்பிக்கைக்குரிய சேவையாக பதிவு அஞ்சல் சேவை திகழுகிறது. இன்றும், கோர்ட், வங்கி மற்றும் அரசு துறை சார்ந்த கடிதங்கள் பதிவு அஞ்சல்கள் மூலம் பாதுகாப்பாக அனுப்பப்பட்டு வருகிறது.சாதாரண தபால்களில் முக்கிய ஆவணங்களை அனுப்பிவைப்பதில் வாடிக்கையாளா்களுக்கு சந்தேகங்கள், சிக்கல்கள் இருந்த நிலையில், அதைக் கருத்தில் கொண்டு பதிவு அஞ்சல் சேவை தொடங்கப்பட்டது. முக்கிய ஆவணங்கள், சான்றுகளை அனுப்பும்போது எந்த கவலையுமின்றி, பதிவு அஞ்சல்களில் அனுப்பலாம். இந்த சேவையில் கடிதத்தின் முகவரிதாரர், முகவரிக்குரியவர் மட்டுமே, பதிவு அஞ்சலை பெற முடியும். அஞ்சல் டெலிவரி செய்யப்பட்டவுடன் ஒப்புதல் அட்டை அனுப்புனர் முகவரிக்கே வழங்கப்படும். இதில், கடிதம் கிடைத்த தேதி, பெறுனரின் கையொப்பம் ஆகியவை இருக்கும். இப்பணி மிகவும் நம்பகத்தன்மை யுடனும், நேர்மையுடனும் நடை பெற்றதால் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.