அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைத்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஓய் சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அங்கீகரிக்கப்பட்டது. இதை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம்தேதி சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. 2015-ம் ஆண்டுமுதல் அது அரசியலமைப்புத் தினமாக கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நேற்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரவுபதிமுர்மு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், “அரசியலமைப்பில் நீதித் துறைக்கான இடம்தனித்துவமானது. நாட்டின் அனைத்து சமூக மக்களிடமிருந்தும் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை 7அடி உயரம் கொண்டது. வழக்கறிஞர் உடை அணிந்தவாறு, அம்பேத்கர் தன்னுடைய கையில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தைபிடித்திருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை சிற்பி நரேஷ் குமாவத்வடிவமைத்துள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படும் முதல் அம்பேத்கர் சிலை இதுவாகும்.