கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாரீஸ் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றுகையில், “உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப் பழமையான மொழி இந்திய மொழி என்பதில் மிகப் பெரிய பெருமை எமக்கு உண்டு. பிரான்ஸ் நாட்டில் இந்தியாவின் சார்பாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட உள்ளது. பிரான்ஸில் திருவள்ளுவர் சிலையை அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை.” எனத் தெரிவித்திருந்தார்.
பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைக்கப்படுவதற்கான முன்னெடுப்பை அந்நாட்டில் உள்ள தமிழ் கலாச்சார சங்கம் முன்னெடுத்தது. திருவள்ளுவரின் சிறப்பை, பிரான்ஸ் மக்களும் கொண்டாடும் வகையில், அங்கு திருவள்ளுவர் சிலை, செர்கே பிரிஃபெக்சர் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், பிரான்சில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் கலாச்சார மன்ற நிறுவனத் தலைவர் இலங்கைவேந்தன், பாண்டுரங்கன், இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான், இந்திய-பிரான்ஸ் துாதர் ஜாவித் அஷ்ரப், செர்ஜி நகர மேயர் ழான் போல் ழான்தம், பாரிஸ் மற்றும் ஹம்பர்க் ஆராய்ச்சியாளர் ழான் லுயிக் செவிய்யார், முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, டெரகோட்டா கலைஞர் முனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில், பிரான்சின் செர்ஜியில் உள்ள திருவள்ளுவர் சிலை, நமது கலாச்சாரப் பிணைப்புகளுக்கு அழகான ஒரு சான்றாகும். திருவள்ளுவர் ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார். அவரது எழுத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள லட்சக் கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், கடந்த ஜூலை மாதம் தமது பிரான்ஸ் நாட்டு பயணத்தின்போது, செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று அறிவித்திருந்தார்.
இன்று, நமது மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள், நமது தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள அன்புக்கும், திருக்குறளின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல அவர் எடுத்துள்ள முயற்சிகளுக்கும், பணிகளுக்கும் சான்றாக, செர்ஜி நகரில் நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கிறது.
நமது தமிழ் மொழியின் பெருமையை உலகெங்கும் பரப்பியுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.