சென்னை மயிலாப்பூரில் டிசம்பர் 16, 1900 ஆம் ஆண்டு பிறந்தவர். பழந்தமிழ் ஓலைச் சுவடிகள், நூல்களைத் தேடித் தேடி சேகரித்து வாசிக்கும் பழக்கம் கொண்டவர். தமிழறிஞர் கோவிந்தராஜன், மகாவித்வான் சண்முகம் பிள்ளை, பண்டிதர் சற்குணர் ஆகியோரிடம் தமிழ் பயின்றார். கி.பி. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழகம் முழுவதும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றும் ஆய்வு செய்தார். தமிழகத்தின் நிலை, ஆண்ட மன்னர்கள், கலாச்சாரம் உள்ளிட்ட பல அம்சங்களையும் ஆராய்ந்தறிந்து துளுநாட்டு வரலாறு, கொங்குநாட்டு வரலாறு உள்ளிட்ட நூல்களை எழுதினார். கல்வெட்டுகள், செப்பேடுகள் குறித்து ஆராய்ந்து, தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணிகள் ஆற்றினார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறைக் கல்வெட்டுகளையும் படித்தறிந்து ஆராயும் திறன் பெற்றிருந்தார். கன்னடம், மலையாளம், பாலி, சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். மலையாளத்தில் இருந்து சில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். புத்த, சமண சமயக் கோயில்கள், தொல்லியல் களங்களை ஆய்வு செய்தார். மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள், பாறைக் கோயில்கள், கட்டிடக் கலையின் தன்மைகளை ஆராய்ந்தார். மகேந்திரவர்மன், கவுதம புத்தர், புத்தர் ஜாதகக் கதைகள், வாதாபிகொண்ட நரசிம்மவர்மன், இறைவன் ஆடிய ஏழுவகைத் தாண்டவங்கள், சமயங்கள் வளர்த்த தமிழ் உள்ளிட்ட 33 நூல்களைப் படைத்துள்ளார். தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ‘தலைமுறைக்குத் தமிழ் முதலாக்கிக்கொண்ட பல்கலைத் தலைவன் எல்லாம் தமிழ்ச் சீனி வேங்கடத்தின் கால்தூசும் பெறாதார் என்பேன்’ என்று பாவேந்தர் பாரதிதாசன் இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். படைப்பாளி, வரலாற்று அறிஞர், சொல்லாய்வு நிபுணர், கல்வெட்டு, சாசனம், தொல்லியல் களங்களில் முத்திரை பதித்தவர், பன்மொழிப் புலவர், சமூகவியல் அறிஞர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்ட மயிலை சீனி.வேங்கடசாமி 80-வது வயதில் (1980) மறைந்தார்.
#mayilaiseenivenkatasami #சான்றோர்தினம்