பாபா ஆம்தே பிறந்த தினம்

0
134

இந்தியாவின் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதி, ‘பாபா ஆம்தே’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட முரளிதர் தேவிதாஸ் ஆம்தே, டிசம்பர் 26, 1914 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், வார்தா மாவட்டத்தின் ஹிங்கான்கட் என்ற கிராமத்தில் பிறந்தார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது வழக்கறிஞர்களை ஒன்று திரட்டி சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களுக்காக வாதாடினார். அதற்காக சிறைத்தண்டனையும் பெற்றார். காந்திஜியின் சேவாகிராம் ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கினார். உயர் ஜாதியினரின் எதிர்ப்பையும் மீறி தன் பண்ணையில் உள்ள கிணற்றை ஹரிஜன மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தார். தீண்டத்தகாதவர்களாக இழிவு செய்யப்பட்ட பங்கி மக்களின் தலைவராக உருவானார். ஒருநாள் சாலையோரத்தில் தொழுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் வலியால் துடித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். அந்தக் காட்சி அவரை உலுக்கியது. முதலில் அங்கிருந்து ஓடிவிட்ட அவர், மனம் பொறுக்காமல் மீண்டும் அங்கு சென்று அந்த மனிதனுக்கு உணவளித்து, மூங்கிலால் ஆன சிறிய குடிலையும் அமைத்துக் கொடுத்துப் பராமரித்தார். இதுதான் இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. காந்திஜி இவரை அபய சாதகன் (துணிவுடன் சத்தியத்தைத் தேடுபவன்) என்று அழைத்தார். வதோதராவில் 1948-ல் சிறிய அளவில் தொழு நோய்க் கண்டறிதல் மற்றும் சிகிச்சை மையத்தைத் தொடங்கினார். அவர்களுக்கு சேவை செய்ய கல்கத்தாவில் டிராப்பிக்கல் நோய்த் தடுப்பு மையத்தில் தொழுநோய் தொடர்பான ஓராண்டு மருத்துவப் பயிற்சியை மேற்கொண்டார். வரோராவைச் சுற்றி ஐம்பது கி.மீ. சுற்றளவில் 11 தொழுநோய் சிகிச்சை மையங்களை உருவாக்கினார்.தொழுநோயாளிகள் வாழ்வில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் துளிர்க்கச் செய்வதே தன் வாழ்நாள் பணி என்று உறுதி ஏற்றார். 1951-ல் சந்திரபூர் வனப்பகுதியில் அரசு சிறிது நிலம் வழங்கியது. நிலத்தை சரிசெய்து, சிறு குடில்களை அமைத்தார். ஏராளமான நோயாளிகள் வந்து சேர்ந்தனர். கைத்தொழில் பயிற்சி அளித்தார். தொழுநோயாளிகள் தயாரிக்கும் பொருள்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இதில் கிடைத்த லாபத்தைக்கொண்டு பார்வையற்றோருக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார்.ஒரு வேளாண்மைக் கல்லூரியையும் தொடங்கினார். சிறிய மருத்துவமனை தொடங்கப்பட்டது. இன்று அது வளர்ந்து பிரம் மாண்டமான மருத்துவமனையாக உருவாகியுள்ளது. தொழுநோய் ஆய்வு மையம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த மக்களை சமூகம் ஒதுக்கி வைத்ததோ அவர்கள் கரங்களினாலேயே பள்ளிகள், கல்லூரியைக் கட்ட வைத்தார். 1988-ல் இந்திய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி பாரத் ஜோடோ (இந்தியாவை இணைத்தல்) பாத யாத்திரை தொடங்கிய இவர், 5 ஆயிரம் மைல் தூரம் நடை பயணம் மேற்கொண்டார். பத்ம விபூஷன், காந்தி அமைதிப் பரிசு, மகசேசே ஆகிய ஏராளமான தேசிய, சர்வ தேச விருதுகள் அவரைத் தேடி வந்தன. இறுதி மூச்சு வரை பின்தங்கிய மக்களுக்காகவே பாடுபட்ட வந்த பாபா ஆம்தே 2008-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 94-வது வயதில் மறைந்தார்.
#babaamte #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here