வீரபாண்டியகட்டபொம்மன் பிறந்த தினம் இன்று

0
264

ஜனவரி 3, 1760 அன்று ஆறுமுகத்தம்மாள்- திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சி புரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம் பெற்றிருந்தார். ஜெக வீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். பெப்ரவரி 2, 1790 அன்று 47-வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797- 1798-ல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798-ல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799-ல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799-ல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799-ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799-ல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.
#veerapandiyakattabomman #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here