இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி, கொச்சியின் வில்லிங்டன் தீவில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் மையம் மற்றும் புதிய கப்பல்துறையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: உலக வர்த்தகத்தின் முக்கிய மையமாக இந்தியா மாறி வருகிறது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிப்புக்கு துறைமுகங்களே காரணம். கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்த்தல் மற்றும் எல்பிஜி இறக்குமதி முனையம் ஆகியவற்றின் உள்கட்டமைப்புகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்த புதிய அம்சங்களால், கப்பல் கட்டும் தளத்தின் திறன் பன்மடங்கு அதிகரிக்கும். சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அதேசமயம் விக்சித் பாரதத்திற்காக நாம் தேர்ந்தெடுத்த பாதை சரியானது என்பதை இது காட்டுகிறது. ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டு மக்களின் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. இதுவரை, ஜன் அவுஷதி கேந்திரா மூலம் மக்கள் ரூ.25,000 கோடி சேமித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.