சீர்காழி_எஸ்_கோவிந்தராஜன் சான்றோர்தினம்

0
180

நாகை மாவட்டம் சீர்காழியில் ஜனவரி 19,1933 ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தை நடத்தும் ராமாயண இசை நாடகத்தில் சிறு வயது ராமனாக நடித்து பாடல்கள் பாடி அனைவரையும் கவர்ந்தார். இவர் திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல், 1953-ல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல். சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். 1949-ல் இசைமாமணி பட்டம், 1951-ல் சங்கீத வித்வான் பட்டம் பெற்றார். சிறந்த புல்லாங்குழல் கலைஞர் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையிடம் பயிற்சி பெற்று இசைத் திறனை வளர்த்துக்கொண்டார். கச்சேரிகளுக்கு இவரையும் உடன் அழைத்துச் செல்லும் சுவாமிநாத பிள்ளை, இவரை தன் மகன் என்றே மற்றவர்களிடம் அறிமுகம் செய்வார். கடும் உழைப்பாளியான சீர்காழி, அயராத சாதகம் மூலம் இசை உலகில் நிலைத்த இடம் பெற்றார். சென்னை மியூசிக் அகாடமியில் 1951-ல் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.‘பட்டணந்தான் போகலாமடி’, ‘அமுதும் தேனும் எதற்கு’, ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’, ‘கண்ணன் வந்தான்’, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’, ‘தேவன் கோவில் மணியோசை’ போன்ற பாடல்கள் இவருக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுத் தந்தன. ஏராளமான பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது, பத்ம விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1983-ல் சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. சென்னை தமிழ் இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார்.இசை அரங்குகளில் தமிழ்ப் பாடல்களையே பாடியவர். இலங்கை, லண்டன், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். தெய்வத் திருமணங்கள், அகத்தியர், ராஜராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.30 ஆண்டுகளுக்கு மேல் திரைப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் தனித்துவம் வாய்ந்த தன் குரலால் பாடி, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 55-வது வயதில் மாரடைப்பால் (1988) காலமானார்.
#sirkazhigovindarajan #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here