ஐ.நா. பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். நாளை முதல் வரும் 26ம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது மராட்டிய மாநிலத்தில் வரும் 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் அவர் மும்பை, ஜெய்ப்பூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பலதரப்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். இந்த ஆலோசனையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளையும் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்ட நிலுவையில் உள்ள சீர்திருத்தங்களை செயல்படுத்துவது தொடர்பாக இந்தியா சார்பில் நீண்ட நாட்களாக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. ஐ.நா.-இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக அவரின் இந்த சுற்றுப்பயணம் கருதப்படுகிறது