தேசிய அளவில் சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகையர், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசால் வழங்கப்படும் இந்த விருது, திரைத்துறையில் மிகப் பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.சிறந்த புதுமுக இயக்குனருக்கு முன்னாள் பிரதமர் இந்திராவின் பெயரில் வழங்கப்பட்டு வந்த விருது இனி, சிறந்த புதுமுக இயக்குனர் என்ற பெயரிலேயே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பரிசு தொகையை இயக்குனரும், தயாரிப்பாளரும் பகிர்ந்து வந்தனர். இனி, அந்த பரிசு தொகை இயக்குனருக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறந்த திரைப்படத்துக்கான விருது நடிகை நர்கீஸ் தத் பெயரில் வழங்கப்பட்டு வந்தன. இனி இந்த விருது, தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டை ஊக்குவிக்கும் திரைப்படம் என்ற பெயரில் வழங்கப்படும். அதே போல, திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் தாதாசாஹேப் பால்கே விருதின் பரிசு தொகை, 10 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்வர்ண கமல் விருதுகளுக்கான பரிசு தொகை, 3 லட்சம் ரூபாயாகவும், ரஜத் கமல் விருதுகளுக்கான பரிசு தொகை, 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.