விரிவுபடுத்தப்படும் தேசிய மாணவர் படை

0
165

தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.), கூடுதலாக 3 லட்சம் பேரை சேர்த்து விரிவாக்கம் செய்வதற்கான பரிந்துரைக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில், என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படை செயல்பட்டு வருகிறது. இதில், உள்ள மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி, கல்வி நிறுவனங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்தன.

இந்நிலையில், தேசிய மாணவர் படையை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விரிவாக்கம் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் என்.சி.சி-க்காக அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும்.

இது தொடர்பாக, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “கடந்த, 1948-ஆம் ஆண்டு 20 ஆயிரம் மாணவர்களுடன் தேசிய மாணவர் படை தொடங்கப்பட்டது. இதன் தேவை தற்போது அதிகரித்துள்ளதால், கூடுதலாக மூன்று லட்சம் மாணவர்களை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் என்.சி.சி.,யின் மாணவர்கள் பலம், 20 லட்சமாக அதிகரிக்கும். மேலும், உலகின் பெரிய சீருடை இளைஞர் அமைப்பாகவும் இது மாறும். என்.சி.சி.யின் விரிவாக்கத் திட்டத்தின் கீழ், புதிதாக நான்கு பிரிவு தலைமையகங்கள் அமைக்கப்படும். மேலும், இரண்டு புதிய என்.சி.சி பிரிவுகளும் இதில் சேர்க்கப்படும். தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் படி, என்.சி.சி விருப்பப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் சம விகிதத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த படையில் உள்ள மாணவர்களுக்கு தரமான பயிற்சி கிடைப்பதுடன் வேலை வாய்ப்பும் உறுதி செய்யப்படும்.

அதோடு, முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்களின் திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், பயிற்சியாளரர்களாக நியமிக்கப்படுவர். இதன் மூலம், தேசத்தை கட்டியெழுப்புவதில், இளைஞர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கும் சூழலை உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here