பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு பலிதான நாள்…

0
298

1. பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் பூங்கா. நான்கு பக்கமும் மதிற் சுவர்களால் சூழப்பட்டு உள்ளே செல்ல ஒரே ஒரு பாதை மட்டுமே உள்ள ஒரு மைதானம். இந்த இடத்தில்தான் ரௌலட் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டம் 1919 ஏப்ரல் 14-ஆம் நாள் நடத்தப்பட்டது. பல ஆயிரக் கணக்கான மக்கள் தலைவர்களின் பேச்சைக் கேட்க மைதானத்தில் கூடியிருந்தனர். அப்போது அந்த இடம் ஆங்கிலப் படையால் சுற்றிவளைக்கப்பட்டது.
2. ஜெனரல் டயர் சுட உத்தரவிட்டவுடன் ஆயிரக் கணக்கான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். தப்பி ஓட வழியின்றித் தவித்தனர். அங்கிருந்த ஒரு கிணற்றில் குதித்தனர். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைவிட மிதி பட்டும் கிணற்றில் குதித்தும் இறந்தவர்கள் அதிகம் இருப்பார்கள். 90 துப்பாக்கிகளால் 10 நிமிடத்தில் 1,650 ரவுண்டுகள் சுடப்பட்டதாக கூறாப்படுகிறது. இறந்தவர்களின் முழுக் கணக்கு மறைக்கப்பட்டது.
3. அங்கே ஒரு 11 வயது சிறுவன் சென்றான். அந்த கோரக்காட்சியைக் கண்டு மனம் கொதித்தான். அங்கிருந்த ரத்த மண்ணைக் கையால் அள்ளினான்; சபதம் ஏற்றான், ‘ஆங்கிலேயர்களை பழிவாங்காமல் விட மாட்டேன்’… அவன் பெயர் பகத்சிங்.
4. இந்த சபத்தை நிறைவேற்ற அவருடன் தோளோடு தோள் கொடுத்து செயல்பட்ட இளைஞர்கள் ராஜகுரு, சுகதேவ்.
5. பகத் சிங், பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டம், பங்கா என்னும் ஊரில் 1907-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று பிறந்தார்.
6. ராஜகுரு, மகாராஷ்டிரா மாநிலம் பூனா அருகே உள்ள (Khed) கெஹெட் என்னும் இடத்தில் 1908-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று பிறந்தார்.
7. சுகதேவ் பஞ்சாபில் உள்ள லூதியானாவில் 1907-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி பிறந்தார்.
8. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும், 1919 -ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையால் உந்தப்பட்டவர்கள்; இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
9. விடுதலையை தங்கள் லட்சியமாகக் ஏற்றுக் கொண்ட இவர்கள், அதை எப்படி அடைவது என ஆராயத் தொடங்கினர். அதற்கு புரட்சிப் பாதையில் ஈடுபடுவது என முடிவெடுக்கின்றனர்.
10. ஒத்த கருத்துடைய இளைஞர்களை ஒன்று திரட்டி ‘ஹிந்துஸ்தான் சோசலிஷக் குடியரசு’ கட்சியை 1926-ஆம் ஆண்டு தொடங்கினர். ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவை விடுதலையடையச் செய்வதே அக்கட்சியின் திட்டம்.
11. 1928 -ஆம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்தபோது அதில் இவர்களின் அமைப்பும் ஈடுபட்டது.
12. அக்டோபர் 30 -ஆம் தேதி சைமன் கமிஷனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் கலந்துகொண்ட இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதிராய் படுகாயமுற்றார். மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் நவமபர் 17 -ஆம் தேதி அவர் மரணமடைந்தார்.
13. இந்த இளைஞர்களை இச்சம்பவம் மிகவும் கோபமுறச் செய்தது. பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர்.
14. விவசாயிகள் மத்தியிலும், தொழிலாளர்கள் மத்தியிலும் விடுதலை வேட்கையை ஏற்படுத்தினர். ஆங்கில அரசும் தொழிலாளர்களை ஒடுக்க நினைத்தது. அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு ‘தொழில் தகராறு சட்ட வரைவு’ என்ற ஒன்றை கொண்டுவந்தது.
15. இந்த தொழில் தகராறு சட்ட வரைவை எதிர்த்து ‘சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்’ குண்டு வீசுவதென்று பகத் சிங்கும் அவரது தோழர்களும் தீர்மானித்தனர்.
16. 1929-ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 அன்று இச் சட்ட வரைவை நிறைவேற்ற இருந்தனர். புரட்சியாளர்கள் பார்வையாளர் பகுதியில் சென்று அமர்ந்துகொண்டனர். தொழில் தகராறு சட்ட வரைவு நிறைவேறியதை அறிவிக்க ஜென்ரல் சுஸ்டர் வந்தபோது, உறுப்பினர்கள் யாரும் இல்லாத பகுதியை நோக்கி அதிக சத்தம் மட்டுமே வரக்கூடிய குண்டுகளை வீசினர். கையால் எழுதப்பட்ட காகிதங்களையும் வீசினர். அதில் “செவிடர்களை கேட்கச் செய்வதற்காக நாங்கள் இந்தக் குண்டை வீசினோம்’’ என்று எழுதப்பட்டிருந்தது.
17. இந்த வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் குண்டு வீசி, துண்டுப்பிரசுரம் வீசிய வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
18. ஆங்கில காவல்துறை அதிகாரி சாண்டர்ஸை சுட்டுக்கொன்ற வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் தொடர்பு தெரியவரவே, அவ்வழக்கும் விசாரிக்கப்பட்டு, மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
19. தூக்கு தண்டனைக்காக குறிக்கப்பட்ட நாள் மார்ச் 24, 1931. ஆனால் 1931 -ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதியே மூவரும் தூக்கிலிடப்பட்டனர். அப்போது ராஜகுருவுக்கு 23 வயது, பகத்சிங், சுகதேவ் ஆகியோருக்கு 24 வயது. அஞ்சாநெஞ்சம் கொண்டு விளங்கிய இவர்கள் சாவைக் கண்டு சலனமோ, கலக்கமோ, வருத்தமோ இன்றி தைரியமாக தூக்கை எதிர்கொண்டனர்.
20. லாகூர் சிறையில் இருந்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் உடல்களை சிறைசாலைக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அதிகாரிகள் கொண்டுசென்று எரித்து, சாம்பலை சட்லெஜ் நதியில் கரைத்துவிட்டனர்.
21. மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டிருந்தால் இவர்களின் தூக்கு தவிர்க்கப்பட்டிருக்கும் என்று ஒரு சர்ச்சையும் உள்ளது. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை தூக்கிலிட்ட சமயத்தில் கராச்சியில் அகில இந்திய காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. காந்திஜியை எதிர்த்து கருப்புக் கொடி காட்டப்பட்டது. பல ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
22. ‘பகத்சிங், சுகதேவ், ராகஜ்குரு ஆகிய இளைஞர்கள் போராடிய விதத்தைத் தான் ஏற்கவில்லையே தவிர, அவர்களது நோக்கம் புனிதமானது. அவர்களது தியாகம் விலைமதிப்பற்றது. அவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறோம்’ என்று தீர்மானம் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
23. மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், தண்டனை குறைக்கப்படும் என்ற ஆசை வார்த்தை கூறப்பட்டும் அதை பகத்சிங் ஏற்கவில்லை. தன் உயிரை ஈந்தேனும் இந்த நாட்டு மக்களின் விடுதலை உணர்வை தட்டி எழுப்பவே விரும்பினார் பகத்சிங். பகத்சிங் இறுதியாக எழுதியது:
“நீங்கள் எங்கள் உயிரைக் கொல்லலாம். லட்சியங்களைக் கொல்ல முடியாது. சாம்ராஜ்ஜியங்கள் ஒரு நாள் அழியும். ஆனால் லட்சியங்கள் என்றும் நிலைக்கும்.”

#BhagatSingh #Sukhdev #Rajguru

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here