ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும், நவீன ‘அக்னி பிரைம்’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்தது.
கடந்த 10 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதோடு, பாதுகாப்புக்கு தேவையான அனைத்து ஆயுதங்களையும் உள்நாட்டிலேயே தயாரித்தும், இறக்குமதி செய்தும் வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, டிஆர்டிஓ மூலம் அக்னி ரக ஏவுகணைகளை தயாரித்து, ராணுவத்தில் இணைத்து வருகிறது. இதுவரை பல்வேறு நிலைகளில் திறன் மேம்படுத்தப்பட்ட அக்னி ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் நவீன “அக்னி-பிரைம்’ ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. கடந்த 3-ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு வெற்றிகரமாக ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.
ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அணு ஆயுதப்பிரிவு மற்றும் ஆயுதப்படைகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணையை வெற்றிகரமாக உருவாக்கி படையில் இணைத்துள்ளதன் வாயிலாக ஆயுதப் படைகளுக்கு வலிமை கிட்டியுள்ளது என்று அவர் கூறினார்.