தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த தினம் இன்று

0
136

திருச்சி அருகே உள்ள எண்ணெயூரில் ஏப்ரல் 6, 1815ஆம் ஆண்டு பிறந்தார். பாடல்களைப் படித்த வேகத்தில் மனதில் பதிய வைத்துக்கொண்டுவிடுவார். சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து ஏராளமான தல புராணங்கள் பாடினார். இவரிடம் பயின்றவர்களில் ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர் குறிப்பிடத்தக்கவர்கள். புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள், எண்ணற்ற தனிப் புராணங்களை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் ‘பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்று புகழப்பட்டார். பெரியபுராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். இவரது படைப்புகள் அனைத்தும் செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. சுமார் 2 லட்சம் பாடல்களை இவர் இயற்றியுள்ளார். ‘தாயைவிட என் மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான்’ என்று உ.வே.சா. இவரைக் குறிப்பிட்டுள்ளார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் என்ற தலைப்பில் இவரது வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா. எழுதினார். தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 61 வயதில் (1876) மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here