2வது ஹாலோ சுற்றுவட்டப்பாதையில் ஆதித்யா எல்-1 விண்கலம்: இஸ்ரோ தகவல்
சூரியனை ஆய்வுசெய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்.1 விண்கலம் இரண்டாவது ஹாலோ சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய, கடந்த 2023ம் ஆண்டு செப்., 2ம் தேதி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள, எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் இந்தாண்டு (2024) ஜனவரியில் நிலை நிறுத்தப்பட்டது.
தற்போது ஆதித்யா எல் 1 விண்கலம் ஹாலோ சுற்றுவட்டப் பாதையில் முதல் சுற்றை நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இந்த சுற்றுவட்டப் பாதையை நிறைவு செய்ய 178 நாட்களை விண்கலம் எடுத்துக் கொண்டுள்ளதாகவும், தற்போது விண்கலம் இரண்டாவது ஹாலோ ஆர்பிட்டில் தனது பாதையை வெற்றிகரமாக மாற்றி சிறப்பாக பயணித்து வருவதாகவும் இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.