மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் பிறந்த தினம்

0
366
ஜூலை-11, மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் (1728-18.11.1757) அவர்களின் அவதாரத் திருநாள் .
இந்திய வரலாற்று ஏடுகளில் 1857-ல் தான் முதல் விடுதலை போர் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. அதற்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் முதல் விடுதலை போர் தமிழகத்தில் நடந்துள்ளது.
அந்தப் போரை நடத்தியவர் கட்டாலங்குளம் மன்னர் வீர அழகுமுத்துக்கோன் .
தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். இவருக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீரஅழகுமுத்துக்கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பிறந்தார்.
1750-ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைய, அதே ஆண்டு வீரஅழகுமுத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார்.
1755-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தலைமையில் நடந்த முதல் விடுதலை போரில் தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பெருமாள்கோயில் வாசலில் வைத்து சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.
முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார். இதனால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு பிரிட்டிஷ் ஜெனரல் முகம்மது யூசுப் கான் (கான் ஷாகெப் என்கிற மருதநாயகம்) தலைமையில் ஆங்கிலேய படைகளை அனுப்பி வைத்தது.
மன்னர் வீரஅழகுமுத்துக்கோனுக்கும் முகம்மது யூசுப் கானுக்கும் (மருதநாயகம்) பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. மன்னர் வீரஅழகுமுத்துகோனின் குதிரை சுடப்பட்டது மற்றும் அவரது வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது.
இறுதியில் மன்னர் வீரஅழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன் நின்ற மன்னர் வீரஅழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தனர்..
பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன்..
இத்தகைய சிறப்புகளை கொண்ட இந்த மாவீரரின் வீரவரலாற்றை இளைஞர்கள் அறிந்து கொள்வது அவசியம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here