ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள நல்லமங்காபாளையம் கிராமத்தில் பிறந்தவர்தான் பொல்லான் . சிறு வயது முதலே மற்போர் வாள் வில் பயிற்சிகளில் ஆர்வம் செலுத்தியவர். ஆறரை அடி உயரத்திற்கு மேல் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் கம்பீரமே உருவாக காணப்பட்டவர்.
அவரது வீரத்தையும் தோற்றத்தையும் கண்ணுற்ற தீரன் சின்னமலை, பொல்லானை தனது படையில் சேர்ததுக் கொண்டார். பொல்லான், தனது திறமை ஆற்றல் காரணமாக வெகு விரைவில் படைத்தளபதியாகவும், தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளராகவும் ஆனார்.
1801-ம் வருடம் பவானியில் நடைபெற்ற காவிரி கரையோர போர், 1802-ம் ஆண்டு நடைபெற்ற சென்னிமலை போர், 1803-ம் ஆண்டு நடைபெற்ற அரச்சலுார் போர் ஆகிய மூன்று போர்களிலும் ஆங்கிலேயரை எதிர்த்து தீரன் சின்னமலை வெற்றி பெற்றார்.
எந்தவித பின்னனியும் இல்லாமல் தீரன் சின்னமலை அவ்வளவு பெரிய ஆங்கிலேயர் படையை வெற்றி பெற்றது எப்படி என்பதை இப்போதும் சில வரலாற்று ஆய்வாளர்கள் வியப்பது உணடு. அதற்கு காரணமாக அவரது வெற்றிகளுக்கு எல்லாம் முக்கிய காரணமாக இருந்தவர்தான் தளபதி பொல்லான். இவர் ஒற்றனாக ஆங்கிலப்படைக்குள் ஊடுரூவி ஆங்கிலேயர்களின் போர்த்தந்திரங்கள், அவர்கள் திட்டங்கள், அவர்களின் ஆயுத பலம் என அனைத்தையும் தீரன் சின்னமலைக்கு தெரிவித்தபடியால் எதிரிகளை எளிதில் களம் கண்டு தீரன் சின்னமலை வெற்றி பெற்றார்.
ஒரு முறை கர்னல் ஹாரிஸ், ஒடாநிலை கோட்டையில் முகாமிட்டிருந்த தீரன் சின்னமலையை சுற்றி வளைக்க திட்டமிட்டு பெரும்படையுடன் முற்றுகையிட்டான். இந்த தகவலை பொல்லான் முன்கூட்டியே தீரன் சின்னமலைக்கு தெரிவித்ததுடன், இந்த முறை கர்னல் ஹாரிசை எதிர்ப்பது என்பது நமக்குதான் உயிர்ச்சேதத்தை அதிகம் விளைவிக்கும் ஆகவே கோட்டையை விட்டு தப்பி விடுமாறு எச்சரிக்கை செய்திருந்தார். தீரன் சின்னமலையும் அப்படியே செயல்பட்டு கோட்டையை காலிசெய்தார்.
இதை அறியாத கர்னல் ஹாரிஸ் கோட்டைக்குள் நுழையும் போது கோட்டை வெற்றிடமாக காணப்பட்டது. நாம் வருவது எப்படி தெரிந்தது எப்படி தீரன் சின்னமலை தப்பினார் என்பது தெரியாமல் குழம்பிப் போன கர்னலுக்கு கோட்டையினுள் பொல்லான் அனுப்பிய துப்பு பற்றிய தடயம் கிடைத்தது.
கொதித்துப் போன கர்னல் பொல்லானை சுற்றி வளைத்துப் பிடிக்க ஆனையிட்டான். பொல்லானின் வாள் வீச்சுக்கு பலர் பலியானாலும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பொல்லான் பிடிபட்டார்.
கோபத்தின் உச்சத்தில் இருந்த கர்னல் பொல்லானை பலர் பார்க்க ஓடாநிலைக் கோட்டை அருகே உள்ள ஜெயராமபுரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
தன் தலைவர் வீரன் சின்னமலை தப்பிவிட்டார் என்ற செய்தியே தனக்கு போதுமானது என்ற சந்தோஷத்துடன் தன்னை நோக்கி சராமரியாக வந்த துப்பாக்கி குண்டுகளை மார்பில் ஏந்தி பொல்லான் இறந்து போனார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி ஆங்கிலேயேரால் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் 1805 ம் ஆண்டு ஆடி மாதம் 1 ந் தேதியாகும்…