தஞ்சை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் வடகரையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாவட்ட செயலாளர் நவாஸ் கான் வீட்டிலும், தேரிழந்தூர் கிராமத்தில் உள்ள முன்னாள் மாவட்ட தலைவர் முகமது பைசல் வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல, திருச்சி ஏர்போர்ட் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த அமீர் பாஷா என்பவர் வீட்டிலும், வாழவந்தான் கோட்டை பகுதியை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சித்திக் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அந்த வரிசையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மேலக்காவேரியை சேர்ந்த யூசுப், கொரநாட்டு கருப்பூரை சேர்ந்த முகமது பைசல், திருமங்கலகுடியை சேர்ந்த காலித், முகமது காலித் மற்றும் முகமது இம்தியாஸ் ஆகியோரது வீடுகளிலும் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.