‛‛ தமிழகத்தில் ஹெராயின், கொக்கைன் போன்ற போதைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகின்றனர்” , என கவர்னர் ரவி கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: போதைப்பொருள் எதிர்கால தலைமுறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதை பற்றி இங்கு நாம் பேசி வருகிறோம். தனி நபர் மற்றும் குடும்பத்தை மட்டுமல்லாமல் சமூகம் மற்றும் ஒரு மாநிலத்தையே போதைப்பொருள் சிதைத்து விடுகிறது. ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் விவசாயம் முதன்மையாக இருந்தது. ஆனால், இன்று போதைப்பொருட்களால் நிலைமை மாறி உள்ளது. சிறப்பாக இருந்த பஞ்சாப் மாநிலமும் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு உள்ளது.