இந்தியா முழுவதும் உள்ள எஃகு ஆலைகள் ஆண்டொன்றுக்கு 1.9 கோடி டன் எஃகு கழிவுகளை வெளியேற்றுவதாக கூறப்படுகிறது. இது போன்ற கழிவுகளை நிலத்தில் வீணாக கிடப்பதற்கு பதிலாக சாலை போட பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து குஜராத்தின் சூரத் நகரில் ஹசிரா தொழிற்பேட்டையில் எஃகு கழிவுகளை கொண்டு சாலை அமைக்கப்பட்டது. எஃகு துறை அமைச்சகம் மற்றும் கொள்கை ஆணையம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் உதவியுடன் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (சி.ஆர்.ஆர்.ஐ.) இதற்கு நிதியுதவி செய்தது.இந்த முன்னோடி சாலை திட்டம் 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 6 வழி நெடுஞ்சாலையாக அமைக்கப்படுகிறது. வழக்கம்போல் பயன்படுத்தும் பிற பொருட்களுக்கு பதிலாக, 100 சதவீதம் எஃகு பொருட்களை பயன்படுத்தியே இந்த சாலை உருவாக்கப்படுகிறது. சாலையின் தடிமனும் 30 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், பருவ காலங்களில் ஏற்படும் சேதத்தில் இருந்து இந்த புதிய முறையானது சாலைகளை பாதுகாக்கும் என நம்பப்படுகிறது.